Followers

Powered by Blogger.

பைரவ முகூர்த்தம்

Posted by ss Friday, May 2, 2014

24 நிமிடங்கள் கொண்டது ஒரு நாழிகை. இவ்வாறு நான்கு நாழிகைகள் சேர்ந்ததே அதாவது ஒன்றரை மணி நேரமே ஒரு முகூர்த்தம் எனப்படும். இது பொதுவான கணக்கு. மேலும், முகூர்த்தம் என்பது புனிதமான காலம் என்றும் பொருள்படும். இடத்தைப் பொறுத்தும், காரியத்தைப் பொறுத்தும் முகூர்த்தத்தின் கால அளவு மாறுபடும் என்பது உண்மையே. உதாரணமாக, சன்னியாசி என்பவர் ஒரு பசு மாடு பால் கறக்கும் நேர அளவிற்குத்தான் ஒரு வீட்டின் முன்பு பிச்சை யாசிப்பதற்காக நிற்கலாம் என்பது சன்னியாச முகூர்த்தம். கோதூளி முகூர்த்தம் என்பது பசு மாடுகள் காலையில் புல் மேய்வதற்காக செல்லும் நேரமாகும். எனவே இத்தகைய முகூர்த்தங்களுக்கு இத்தனை மணி, நிமிடம் என்ற கால வரையறையை நிர்ணயிக்க முடியாது.

சித்தர்கள் கணக்கில் பிரம்ம முகூர்த்தம் என்பது விடியற் காலையில் மூன்றரை மணி முதல் ஐந்தரை மணி வரைக்கும் உள்ள நேரமாகும். அபிஜித் முகூர்த்தம் என்பது நண்பகல் நேரமாகும். இதுவும் கால தேச மாறுபாடு உடையதே. 

இத்தகைய முகூர்த்த நேரத்தின் இடையில்தான் சித்தர்கள் கணக்கிடும் அமிர்த நேரம் என்ற சித்த முகூர்த்தங்கள் அமைகின்றன. சித்தாமிர்த நேரம் ஒரு நிமிடம் மட்டுமே அமையும்.

அதுபோல பைரவ முகூர்த்தம் என்ற அற்புதமான முகூர்த்த நேரம் உண்டு. சித்தர்களின் கிரந்தங்களில் மட்டுமே காணப்படும் இந்த அற்புத அமிர்த நேரத்தை முதன்முதலாக உலகிற்கு வழங்கியவரே நமது ஸ்ரீவெங்கடராம சுவாமிகள் ஆவார்கள்.

சூரிய உதயத்திற்கு முன்னும் பின்னும் உள்ள நான்கு நிமிட நேரமே பைரவ முகூர்த்தம் என்று வழங்கப்படுகின்றது. உதாரணமாக, ஒரு நாள் காலை சூரிய உதயம் 6 மணி 12 நிமிடம் என்று வைத்துக் கொண்டால் சூரிய உதயத்திற்கு முன்னால் உள்ள நான்கு நிமிடங்களும் சூரிய உதயத்திற்குப் பின் உள்ள நான்கு நிமிடங்களும், அதாவது 6 மணி 8 நிமிடத்திலிருந்து 6 மணி 16 நிமிடம் வரை உள்ள எட்டு நிமிட நேரமே பைரவ முகூர்த்தம் என்று சித்தர்களால் வரையறுக்கப்பட்டுள்ளது.

திருமணம், கிரகப்பிரவேசம் போன்ற எந்த நற்காரியத்திற்கும் முகூர்த்தம் லக்ன நேரம் குறித்துதான் காரியங்களை நிகழ்த்த வேண்டும் என்பது நீங்கள் அறிந்ததே. ஆனால், போதிய ஜோதிட ஞானம் இல்லாதோரும் சூழ்நிலை காரணங்களால் இத்தகைய முகூர்த்த லக்னங்களில் நற்காரியங்களை நிகழ்த்த இயலாதபோது மேற்கூறிய முகூர்த்தங்கள் நற்காரிய சித்தி அளிக்கவல்லதாய் அமைகின்றன. சூன்ய திதி, அசம்பூர்ண நட்சத்திரங்கள், பகை ஹோரைகள் போன்ற பற்பல பஞ்சாங்க தோஷங்களைக் களையக் கூடிய சக்தியை உடையதே அபிஜித் போன்ற விசேஷ முகூர்த்தங்கள் ஆகும்.

இவ்வாறு பைரவ முகூர்த்த நேரத்தில் இயற்ற வேண்டிய வழிபாடுகள் ஏராளமாக உண்டு. அவ்வழிபாடுகள் நாம் காலத்தை முறையாகப் பயன்படுத்தாத தோஷங்களுக்கு ஒரளவு பரிகாரமாக அமைகின்றன. சித்தர்கள் அருளிய பைரவ முகூர்த்த நேரத்தைக் குறிப்பதே பைரவ மூர்த்திகளின் வாகனமாய் எழுந்தருளியுள்ள நாய்களின் வால் பகுதியாகும். எந்த அளவிற்கு பைரவ மூர்த்திகளின் வாகனங்களின் வால் பகுதியைத் தியானித்து வழிபாடுகளை மேற்கொள்கிறோமோ அந்த அளவிற்கு பைரவ முகூர்த்தத்தைப் பற்றிய ரகசியங்களை நாம் தெரிந்து உணர்ந்து அதை நற்காரிய சித்திக்குப் பயன்படுத்த முடியும் என்பது சித்தர்களின் அறிவுரை,

பைரவ வாகனத்தின் வால் பகுதியில் அப்படி என்ன விசேஷம் விரவி உள்ளது? பைரவ வாகனம் என்பது தர்ம தேவதையே. எம்பெருமானின் வாகனமான நந்தி மூர்த்தியாகவும் தர்ம தேவதை எழுந்தருளி உள்ளது நாம் அறிந்ததே. கிருத யுகத்தில் நான்கு கால்களில் திரமாக நின்ற தர்ம தேவதை தற்போதைய கலியுகத்தில் ஒரே ஒரு காலில் மட்டும்தான் நிற்கின்றது. எனவேதான் எங்கு பார்த்தாலும் கொலை, கொள்ளை, திருட்டு போன்ற தகாத நிகழ்ச்சிகளையே நாம் சந்திக்கிறோம்.

இத்தகைய தகாத நிகழ்ச்சிகள் நம்மைத் தாக்காது நம்மைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டுமானால் தர்ம தேவதையின் ஆசீர்வாத சக்திகளை நாம் பெற்றாக வேண்டும். கலியுகத்தில் பூமியில் நிலை கொண்டிருக்கும் தர்ம தேவதையின் நாலாவது கால்தான் பைரவ வாகனத்தின் வால் பகுதியாகும். நாம் பைரவ வாகனத்தின் வால் பகுதியைத் தியானித்து வழிபாடுகள் இயற்றும் அளவிற்கு நாம் தர்ம தேவதையின் அனுகிரக சக்திகளைப் பெற்றவர்கள் ஆகிறோம்.

பைரவ வாகனத்தில் வால் பகுதியைப் பொறுத்து பைரவ மூர்த்திகளின் அனுகிரக சக்திகளும் பலவிதமாய் பரிமாணம் கொள்கின்றன.

உதாரணமாக,



  1. பைரவ வாகனத்தின் வால் பகுதி சுருட்டிக் கொண்டு வட்ட வளையம் போல் இருக்கும். இந்த பைரவ மூர்த்திகள் தர்ம சக்கர பைரவ மூர்த்திகள் என்றழைக்கப்படுகின்றனர். பூமி சூரியனைச் சுற்றும் கால அளவை இந்த பைரவ மூர்த்திகள் நிர்ணயிப்பதால் இரவில் செய்ய வேண்டிய காரியங்கள், பகலில் செய்ய வேண்டிய காரியங்கள் போன்றவற்றில் ஏற்படும் குழப்பங்கள், அவற்றால் ஏற்படும் கால தோஷங்கள் இவற்றை இத்தகைய பைரவ மூர்த்திகள் களைகிறார்கள்.

  2. கணவன் மனைவி இவர்களுக்கு இடையே உள்ள தாம்பத்திய உறவிற்கு இரவு நேரமே ஏற்றது. பகல் நேர புணர்ச்சி நரம்புக் கோளாறுகளையும் சந்ததிகளின் அவயவ குறைபாடுகளையும் தோற்றுவிக்கும்,

    அதே போல பகலில் தூங்குவதும் உட்கார்ந்த, நின்ற நிலையில் தூங்குவதும் உடல் நலத்திற்கு உகந்ததன்று. இரவு நேர எண்ணெய்க் குளியலும் ஆரோக்கியத்தை அளிக்காது.

    இரவு நேரப் பயணங்களும், இரவில் நெடு நேரம் கண் விழித்லும் உடல் நலத்திற்கு கேடு விளைவிக்கும்.

    இது போன்ற பகலிரவு கர்ம மாறுபாடுகளில் ஏற்படும் தோஷங்களை ஓரளவு நிவர்த்தி செய்வதே தர்ம சக்கர பைரவ மூர்த்திகள் வழிபாடாகும்.
  3. பைரவ வாகன மூர்த்திகளின் வால் பகுதி கொடியைப் போல் மேல் பகுதியில் வளைந்திருக்கும். இத்தகைய வாகனங்களை உடைய பைரவ மூர்த்திகள் தர்மக் கொடி பைரவ மூர்த்திகள் என்று அழைக்கப்படுகின்றனர். பதவி, செல்வாக்கு, பணம், ஆரோக்கியம் போன்ற நிலைகளில் உயர் நிலையிலிருந்து விதி வசத்தால் தாழ்ந்த நிலையை அடைந்தவர்கள் வழிபட வேண்டிய மூர்த்தியே தர்மக் கொடி பைரவ மூர்த்தி ஆவார்.


  4. நீதிபதிகள், ஆட்சியாளர்கள், மந்திரிகள் திடீரென்று பல்வேறு காரணங்களால் தங்கள் பதவியை இழந்து வாடும்போது அவர்களை இதுவரை அண்டியிருந்த நண்பர்கள், உறவினர்கள், ஆதரவாளர்கள் அனைவரும் மறைந்து விடுவார்கள். இது அன்றாடம் நடக்கக் கூடிய நிகழ்ச்சியாகும். ஆனால், இத்தகைய துன்பங்களால் பாதிக்கப்படும்போதுதான் அதன் உண்மை வேதனை புரிய வரும். இத்தகைய எதிர்பாராத துன்பங்களைச் சந்திக்க வேண்டிய இக்கட்டான சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டவர்கள் வழிபட வேண்டிய மூர்த்தியே, தர்மக் கொடி பைரவர் ஆவார், மன அமைதியையும் தன்னம்பிக்கையையும் அளிக்க வல்லதே தர்மக் கொடி பைரவ மூர்த்தியின் வழிபாடாகும்.
  5. பைரவ மூர்த்திகளின் வாகனங்கள் வலது புறம் நோக்கியும் இடது புறம் நோக்கியும் பார்த்தவாறு அமைவதுண்டு. பைரவ மூர்த்திக்கு இடது புறம் பார்க்கும் வண்ணம் வாகனம் அமைந்த மூர்த்தி ஆடபீஜ பைரவ மூர்த்தி என்றும், பைரவ மூர்த்திக்கு வலப் புறம் பார்க்கும் வண்ணம் அமைந்த வாகனத்தை உடையவர் மகபீஜ பைரவ மூர்த்தி என்றும் அழைக்கப்படுகிறார்.
    எண்ணிக்கை குறைவு, அடர்த்திக் குறைவு போன்ற விந்துக் குற்றங்களால் அவதியுற்று குழந்தை பாக்கியம் இல்லாத தம்பதிகள் மகபீஜ பைரவ மூர்த்திகளை செவ்வாய், வியாழக் கிழமைகளில் வழிபடுவதால் நற்சந்ததிகள் இறைப் பிரசாதமாக கிட்ட வாய்ப்புண்டு.

    இரத்தச் சோகை, கர்பப்பை கோளாறுகள் போன்ற காரணங்களால் பாதிக்கப்பட்ட தம்பதிகள் ஆடபீஜ பைரவ மூர்த்திகளை வெள்ளிக் கிழமைகள் தோறும் வணங்கி வழிபடுவதால் நற்குணம் மிக்க குழந்தைகளைப் பெற இறைவன் அருள் புரிவார்.

  6. வாகனம் ஏதுமின்றி அருள்புரியும் பைரவ மூர்த்திகளும் உண்டு. இவர்கள் சுதர்ம சக்கர பைரவ மூர்த்திகள் என்று அழைக்கப்படுகின்றனர். எவ்வளவோ படிப்பு, புத்திசாலித்தனம் போன்ற நல்ல தகுதிகளைப் பெற்றிலிருந்தாலும் தகுதிக்கு ஏற்ற வேலை வாய்ப்புகள் கிட்டாமல் குறைந்த சம்பளத்தில் வேலை பார்க்க வேண்டிய நிலையில் உள்ளோர் இத்தகைய பைரவ மூர்த்திகளை வணங்கி வழிபடுவதால் படிப்பு, அறிவுத் தகுதிகளுக்கு ஏற்ற நல்ல வேலைகள் அமையும்.
  7.  

0 comments

Post a Comment

Popular Posts

Free Website templatesfreethemes4all.comLast NewsFree CMS TemplatesFree CSS TemplatesFree Soccer VideosFree Wordpress ThemesFree Web Templates